நேபாளத்தில் பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 2 இந்தியர்கள் உட்பட 25 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய நேபாளத்தின் கவுர் நகரில் இருந்து சுற்றுலாத்தலமான போக்ஹாரா நகருக்கு நேற்று அதிகாலை 45 பேருடன் பயணிகள் பஸ் புறப்பட்டது. அந்த பஸ் சாண்டிபான்ஜ்யாங் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஆற்றில் கவிழ்ந்தது.
சுமார் 200 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு ஆற்றில் மூழ்கியது. இதில் 25 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேர் இந்தியாவின் பிஹார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த தேகன் தாகுர், சங்கர் தாகூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை பிஹார் கொண்டு வருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பஸ் விபத்தில் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சித்வான் நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து நேபாள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நேபாளத் தின் காவ்ரே மாவட்டத்தில் பயணிகள் பஸ் மலையடிவார பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலியாகினர். அதற்குள் மீண்டும் ஒரு பஸ் விபத்து நேரிட்டுள் ளது.
மோசமான சாலை, பழுதடைந்த வாகனங்களால் நேபாளத்தில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருவதாக அந்த நாட்டு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.