பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரபின் மருத்துவ அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மருத்துவ அறிக்கையை அடுத்து புதன் கிழமை வரை 2 நாள்களுக்கு விசாரணையில் இருந்து முஷாரப் ஆஜராகாமல் இருக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி பைசல் அராப் விலக்கு வழங்கினார்.
மருத்துவ அறிக்கையை பரிசீலனை செய்து வியாழக்கிழமை உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். திங்கள்கிழமை முஷாரப் விசாரணைக்கு ஆஜராகாததால் அன்றைக்கு விலக்கு வழங்கிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்குள் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மருத்துவ அறிக்கையை நீதிமன்ற பதிவாளர் நீதிபதிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார். கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக ராவல் பிண்டியில் உள்ள இதய நோய் மருத்துவ நிலையத்தில் முஷாரப் சேர்க்கப்பட்டார். அந்த மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கை தரப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அரசமைப்புச் சட்டத்தை புறக்கணித்து நவம்பர் 2007ல் நெருக்கடி நிலையை அமல் படுத்தினார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை அடைத்துவைத்தார் என்றும் முஷாரப் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.