கியூபா தலைவர் பிடல் காஸ் ட்ரோவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளின் சமூகம் (செலாக்) மாநாடு கியூபா தலைநகர் ஹவானாவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. அமெரிக்கா, கனடா தவிர அந்த பிராந்தியத்தில் உள்ள 33 இறையாண்மை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பார்வையாள ராக பங்கேற்க கியூபா சென்றிருந்த பான் கி மூன், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ் ட்ரோவை சந்தித்துப் பேசினார்.
சிரியா, மத்திய ஆப்பிரிக்க குடி யரசு, தெற்கு சூடான், காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் நிலவும் பிரச்சினைகள், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, அணு ஆயுதப் பரவல் தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசினர். அரசியல் எதிரிகளை கியூபா நடத்தும் விதம் அல்லது மனித உரிமை குறித்து அவர்கள் பேசினார்களா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
ஆனால் இந்த விவகாரத்தை, காஸ்ட்ரோவின் இளைய சகோதரரும் கியூபாவின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ மற்றும் அதிகாரிகள் பலரிடம் பான் கி மூன் எழுப்பியதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறினார். “கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்தும் ரவுல் காஸ்ட்ரோவுடன் பான் கி மூன் விவாதித்தார்” என்றார் அவர்.