இலங்கை சிறைகளில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் மாளிகை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா நேற்று (வியாழக்கிழமை) புறக்கணித்த நிலையில், நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது ஊக்கமளிப்பதாக இளைஞர் அதிபர் ராஜபக்சே ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையிலேயே மீனவர்கள் விடுதலைக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக - இலங்கை மீனவர்கள் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இலங்கையில் மார்ச் 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், புதன் கிழமை சிறைபிடிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள் உள்பட 98 மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.