ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்சிட்) தொடர்பான அறிவிக்கையில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டார். இந்தக் கடிதத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பரோ வழங்கினார்.
ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்காக லிஸ்பன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையின் 50-வது பிரிவின் கீழ், மற்ற உறுப்பு நாடுகளுக்கு பிரிட்டன் இந்த அறிவிக்கையை வழங்கி உள்ளது.
இதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது, வரும் காலத்தில் யூனியனுடன் உறுப்பினர் அல்லாத நாடு என்ற வகையில் பிரிட்டன் எத்தகைய உறவை கடைபிடிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். இதன்படி வரும் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிரிட்டன் முறைப்படி வெளியேறும்.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனில் உள்நாட்டு மக்களுக்கு வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, யூனியனிலிருந்து வெளியேற முடிவு செய்த பிரிட்டன் பொதுமக்களிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பெரும்பாலான மக்கள் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். இதன்படி, யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.