உலகம்

உலக மசாலா: நகரும் வீடு!

செய்திப்பிரிவு

பிரையன் சலிவனும் ஸ்டார்லாவும் 3 குழந்தைகளுடன் வாஷிங்டனில் வசித்து வருகின்றனர். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீட்டு வாடகைக் கொடுத்துக் கொண் டிருந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் பணம் விரயமாகிறது என்ற எண்ணம் வந்து விட்டது. சொந்தமாக வீடு வாங்கும் நிலையில் இல்லாததால், குறைந்த செலவில் ஒரு வீட்டை உருவாக்குவது எப்படி என்று யூடியூப் வீடியோக்களைப் பார்த்தனர். இறுதியில் ஒரு பழைய பேருந்தை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். 20 லட்சம் ரூபாய் செலவு செய்து, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன வீடாக மாற்றிவிட்டார்கள். “நாங்கள் முதலில் குடியிருந்த வீட்டுக்கும் பிரையன் அலுவலகத்துக்கும் ஒரு மணி நேரம் பயணம் செய்யணும். வாடகை கொடுப்பதற்காகவே ஓவர் டைம் வேலை செய்வார். சில நேரம் காரிலேயே 3 மணி நேரம் தூங்கிவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்வார். அவரைப் பார்ப்பதற்கே நாங்கள் பல நாள் காத்திருக்கணும். இந்த வாழ்க்கையை எப்படியாவது மாற்ற முடிவு செய்தோம். பேருந்து வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்ததைவிட மிகவும் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ்க்கை நடத்துகிறோம். வெளியிலிருந்து பார்த்தால்தான் இது பேருந்து. உள்ளே வந்தால் அழகான வீடு. சமையலறை, படுக்கையறை, வரவேற்பு அறை, குளியலறை அனைத்தும் இருக்கின்றன. இடத்தை வீணாக்காமல் பயன்படுத்தியிருக்கிறோம். பிரையனின் அலுவலகத்துக்கு பக்கத்திலேயே பேருந்தைக் கொண்டுவந்துவிட்டோம். அதனால் எங்களோடு அதிக நேரம் செலவிட முடிகிறது. போகுமிடமெல்லாம் வீட்டையும் நாங்கள் எடுத்துச் செல்லலாம். வாடகை கொடுத்த பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு மிச்சமானதால் கடன்களை அடைத்துவிட்டோம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் என்பதால், இரவில் மின்சாரம் கிடையாது. அதனால் குளிர்க் காலங்களில் தண்ணீர் உறைந்துவிடும், அறைக்குள் வெப்பமும் கிடைக்காது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. அதற்காக மீண்டும் வீட்டை நோக்கிச் செல்ல மாட்டோம். இதில் மின்வசதியைக் கொண்டு வர முயற்சி செய்வோம்” என்கிறார் ஸ்டார்லா.

நகரும் வீடு!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் பால் க்ராஸ்ஸன் மோட்டார் சைக்கிள் பயணி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் கிளம்பிவிடுவார். சாலையில் ஒரு நாயைப் பார்த்தார். உடனே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, பலரும் நாயை வளர்க்க விருப்பமில்லாமல் தெருவில் விட்டுவிட்ட தகவல் கிடைத்தது. வளர்க்க ஆரம்பித்தார். “மில்லி மிகவும் சமர்த்தானவள். சொல்வதை எளிதில் புரிந்துகொள்வாள். அவளுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய முடிவெடுத்தேன். மில்லிக்குத் தோலாடை, தலைக் கவசம் அணிந்து அழைத்துச் சென்றேன். பயணத்தை அவ்வளவு விரும்பினாள் மில்லி. சாலையில் செல்பவர்கள் அவளிடம் ஹலோ சொல்லும்போது மட்டும் அப்படி, இப்படித் திரும்பிப் பார்ப்பாள். மற்றபடி சாலையை நேராகப் பார்த்துக்கொண்டே வருவாள். வண்டி நிற்கும் இடங்களில் சாப்பிடுவாள். கழிவறைக்குச் செல்வாள். என்னைப் போலவே மில்லிக்கும் பயணம் பிடித்ததிலும் துணையுடன் செல்வதிலும் எனக்கு மகிழ்ச்சி. நான் சும்மா இருந்தாலும்கூட இப்போதெல்லாம் மில்லி விடுவதில்லை, மோட்டார் சைக்கிளைக் காட்டி, பயணம் கிளம்ப வேண்டுமென்கிறாள். நாங்கள் இருவர் மட்டும் அடிக்கடி பயணம் செல்வதில் என் மனைவிக்குதான் பொறாமை” என்கிறார் பால் க்ராஸ்ஸன்.

வீட்டுக்கு வெளியேதான் உலகம் இருக்கு என்று மில்லிக்கும் தெரிந்திருக்கு!

SCROLL FOR NEXT