உலகம்

அபாயத்தின் புதிய பெயர் ISIS

செய்திப்பிரிவு

ISIS என்றால் முன்னொரு காலத்தில் நினைவுக்கு வரக்கூடியது ஓர் எகிப்தியப் பெண் தெய்வம். திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகைக்கு நிகரான தெய்வம் என்று சொன்னால் கொஞ்சம் புரியும். குழந்தை பிறப்பு, விவசாய விருத்தி போன்ற சங்கதிகளுக்கு மேற்படி தெய்வத்தை வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

இன்றைக்கு ISIS என்றால் இராக்கையும் சிரியாவையும் சேர்த்துக் கலங்கடிக்கும் ஒரு பயங்கர இயக்கம். இது அல் காய்தாவின் நிழல் இயக்கமா, ஃப்ராஞ்சைசீஸா அல்லது அல் காய்தாவே புனை பெயரில் இப்படி இயங்குகிறதா என்கிற குழப்பம் இருக்கிறது. எப்படியானாலும் அல் காய்தா சங்காத்தம் நிச்சயம். ஏனெனில் அதிரடிகளில் அந்தப் பாணி இருக்கிறது. கலங்கடிக்கிற விஷயங்களில் ஒரு களேபர உத்தியைப் பின்பற்றுகிறார்கள். சிரிய யுத்தமானாலும் சரி, இராக்கில் வெடி வைத்துத் தகர்க்கும் வைபவங்களானாலும் சரி, ISIS பங்குபெறும்போது அடையாளம் காண்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.

கடந்த வாரம் இராக்கில் இந்த ISIS நிகழ்த்திய தாக்குதல்கள் தேசம் முழுதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியிருக்கிறது. இப்போதே என்னவாவது தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் வளர விட்டுவிட்டால் பின்னால் அடக்குவது ரொம்பக் கஷ்டமாகிவிடும் என்கிற கவலை அக்கம்பக்கத்து தேசங்களிலும் பரவத் தொடங்கி யிருக்கிறது.

அமெரிக்க சம்பந்தம் இராக்கில் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இராக்கிய அதிபர் என்றொரு உத்தமோத்தமர் இருந்தாலும் அமெரிக்காவைக் கேட்காமல் அவர் அடுத்த வேளை தயிர் சாதம் கூடச் சாப்பிடுவதில்லை. ஆனாலும், சதாமுக்குப் பிந்தைய ஈராக்கைப் புனருத்தாரணம் பண்ணி வைக்கிறேன் பேர்வழி என்று அமெரிக்கா இதுகாறும் என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உடனே பதில் சொல்லுவது கஷ்டம்.

மூலைக்கு மூலை கலவரங்கள், குண்டு வெடிப்புகள், தூதரகத் தாக்குதல்கள், நேரடி யுத்தம் என்று ஒரு நாள் விடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்தாலும் அரசாங்கத்தால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை நிலவரம்.

இராக்கில் அல் காய்தா மறுபிறப்பெடுத்திருக்கிறது என்று மத்தியக் கிழக்கு அரசியல் நோக்கர்கள் கருதினாலும், அல் காய்தா மட்டுமல்லாமல் வேறு பல சிறிய, புதிய குழுக்களும் திடீர் உற்பத்தியாகிக் குட்டையைக் குழப்பிக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது. இதில் இனக்குழு மோதல்கள் தனி.

இது ஒரு புறமிருக்க, சமீபத்திய ISIS தாக்குதல்களின் பயங்கர சதவீதத்தைக் கணக்கில் கொண்டு அமெரிக்கா இதற்குத் தக்க பதிலடி தருமா என்று இராக்கிய அரசும் சரி, மக்களும் சரி, இலவு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஜான் எஃப் கெர்ரி நேற்றைக்கு ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

இராக் அரசு என்னவாவது உதவி கேட்டால் செய்யத் தயாராக இருக்கிறோமே தவிர, படைகளை அனுப்பிவைக்கிற உத்தேசமில்லை என்பதே அது. இந்த நேரத்தில் வேறென்ன உதவி வேண்டியிருக்கும் என்று கேட்கப்படாது. அமெரிக்காவுக்கு யுத்தத்தில் விருப்பமில்லை. சகாய சம்பத்து வேண்டுமானால் செய்யத் தயார் என்றால், ஆயுதம் தருவார்களா? பதில் குண்டுகளை பார்சலில் அனுப்புவார்களா? தெரியாது.

யாதவ குலம் அடித்துக் கொண்டு செத்த மகாபாரத காலத்தை இராக்கில் மறு உருவாக்கம் செய்ய அமெரிக்கா விரும்புகிறதோ என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

SCROLL FOR NEXT