உலகம்

சவுதி அரேபியாவில் தத்தளிக்கும் 53 தமிழர்கள்: தமிழகத்திடம் உதவி கேட்கும் ரியாத் தமிழ்ச்சங்கம்

குள.சண்முகசுந்தரம்

அரேபியாவில் நிக்காதத் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் 53 பேர் தாயகம் திரும்பமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சவூதி அரேபியாவில், உரிய ஆவணங்கள் இன்றியும் விதிகளுக்குப் புறம்பாகவும் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை வெளி யேற்றுவதற்காக ‘நிக்காதத்’ சட்டத்தை அமல் படுத்தினார் சவூதிமன்னர் அப்துல் லாஹ் பின் அப்துல் அஜீஸ்.

எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது, சட்டவிரோதமாக தங்கி இருப்பவர் களுக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் சவூதியைவிட்டு வெளி யேறுவதற்கு நவம்பர் 3-ம் தேதி வரை காலக்கெடு வைத்தார் மன்னர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லட்சக் கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதியை விட்டு வெளியேறினார்கள். இந்தியர்கள் மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் வெளியேறினார்கள்.

ஆனால், மேலும் அவகாசம் கிடைக்கலாம், நிக்காதத் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான வர்கள் சசவூதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்தார்கள்.

ஆனால், கெடுமுடிந்த பிறகு நவம்பர் 4-ம் தேதி 3918 பேரும், அடுத்த நாள் 1899 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள். இதில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டி யளித்த ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சமுதாய சேவைப்பிரிவுத் தலைவர் அகமது இம்தியாஸ், “இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலைக்காகஅழைத்து வரப்படுபவர்களை சொன்னபடி வேலையில் சேர்த்துவிடாமல் ஏதாவது ஓரிடத் தில் வேலைக்கு தள்ளிவிடுகிறார்கள். இதனால் வெளிநாட்டினர் பலபேர் இங்கே ஆடு, ஒட்டகம் மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இன்னும் பலர், வேறு நிறுவனங்களில் தாங்களாகவே வேலைகளை தேடிக்கொண்டார்கள். இப்படி விதிகளை மீறும் நபர்களுக்கு உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் ஏகப்பட்ட சங்கடங்களை அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதை முடிவுக்கு கொண்டு வருவ தற்காகத்தான் நிக்காதத் சட்டத்தை அமல்படுத்தினார்கள். இத்தனை லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பார்கள் என்ற விவரமே சட்டம் அமலான பிறகு தான் சவூதி அரசுக்கு தெரியவந்தது.

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு மாத்திரமில்லாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கும் இரண்டு ஆண்டு சிறையும் ஒரு லட்சம் ரியால் (இந்திய ரூபாய்க்கு 16 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டதால், சட்டம் அமலுக்கு வந்ததுமே, சட்ட விரோதமாக தங்கி இருந்தவர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள். ரியாத்தின் கஸ்ஸான் தெருவில் உள்ள பூங்காவில் 2000 பேர் வரை அகதிகளாய் கூடிவிட்டார்கள். இவர்களில் சுமார் 500 பேர் இந்தியர்கள்; இதில் சுமார் 200 பேர் தமிழர்கள்.

நம்மவர்களுக்கு கடந்த எட்டு மாத காலமாக சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசியங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ரியாத் தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் கவனித்துக் கொண்டோம். உரிய ஆவணங்களை தயாரித்து அவர்களை தாயகம் அனுப்பு வதற்கு கால அவகாசமும் நிதியும் தேவை ப்பட்டது.

ஏதோ எங்களால் முடிந்த அளவுக்கு சுமார் ஆறு லட்சம்வரை நிதி திரட்டி இத்தனையையும் கவனித்துக் கொண்டோம். இப்போது கெடு காலம் முடிந்துவிட்டதால் நம்மவர்களை கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் தங்க வைத்திருக்கிறோம்.

இப்போது அங்கே 180 இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் 53 பேர் தமிழர்கள். சவூதியில் உள்ள கேரளத்தவர்கள், மலையாள இளைஞர்கள் தாயகம் திரும்புவதற்கு தாராளமாய் நிதி உதவி செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள தமிழ்ச் செல்வந்தர்கள் நம்மவர்களுக்கு உதவி செய்யத் தயங்குகிறார்கள்.

சவூதியிலிருந்து மும்பை வருவதற்கு டிக்கெட்டிற்கு மட்டுமே குறைந்தது 12 ஆயிரம் ரூபாய் தேவைப் படுகிறது. தமிழகத்திலிருந்து போதிய உதவி கிடைத்தால், தவித்துக் கொண்டிருக்கும் 53 தமிழர்களும் ஒரே வாரத்தில் தாயகம் திரும்பிவிடுவார்கள்’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT