ஈகுவேடாரில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் சில சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அரசியலில் தலையிடுவதால் அவற்றின் நிதியுதவியை குறைக்கவும், செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஈகுவேடார் அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையின் திட்டங்களை செயல்படுத்தப்போவதில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசத்தை நீட்டிக்கப் போவதில்லை என்றும் ஈகுவேடார் சர்வதேச ஒத்துழைப்பு அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளின் அரசுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதுள்ள திட்டப்பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் ஈகுவேடாரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. ஆண்டுதோறும் 3 கோடியே 20 லட்சம் அமெரிக்க டாலரை அந்நாடு வழங்கி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளை கட்டுப்படுத்தப்போவதாக இடதுசாரிக் கட்சியை சேர்ந்த ஈகுவேடார் அதிபர் ரஃபேல் கோர்ரியா அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், உள்ளூர் அரசியலில் தலையிடுவதாகவும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை மீது கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈகுவேடார் அதிபர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.