இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் கலவரத்தை தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் கூறியது:
விசா விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. அது ஒரு பிரச்சினையே இல்லை. நரேந்திர மோடி விசா வேண்டி விண்ணப்பித்தால் அதை நாங்கள் பரிசீலிப்போம். இதுவரை அவர் விண்ணப்பம் செய்யவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்பு பாஜக ஆட்சியின்போதே இந்தியாவுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறது. இந்திய பொதுத் தேர்தலில் ஆட்சி மாறினால்கூட அமெரிக்காவின் உறவு மாறாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் இப்போதும் எப்போதும் வலுவான உறவு தொடரும்.
இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியத் தலைமையில் யார் இருந்தாலும் அவர்களோடு அமெரிக்காவின் உறவு நீடிக்கும் என்று அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் பல்வேறு மூத்த அதிகாரிகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தொடர்பில் உள்ளோம் என்று கூறியது நினைவுகூரத்தக்கது