உலகம்

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அமைச்சர் சந்திப்பு

செய்திப்பிரிவு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அடுத்த சுற்றுப் பேச்சு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மூனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். ஜெர்மனியில் உள்ள மூனிக் நகரில் பாதுகாப்பு சம்பந்தமான மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்திருந்தவர்களில் இந்த இரு தலைவர்களும் அடங்குவர்.

ஈரான் அமைச்சர் முகம்மது ஜாவித் ஜரீப்பை கெர்ரி சந்தித்துப் பேசிய தகவலை அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி வெளியிட்டார். எனினும் இருவரும் நடத்திய பேச்சின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் தடைகளை தளர்த்துவதற்கு பலனாக ஈரானின் அணு சக்தி திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஒப்பந்தம் நவம்பரில் ஈரான் மற்றும் 6 வல்லரசுகள் இடையே கையெழுத்தானது.

இந்த இடைக்கால ஒப்பந்தம் ஜனவரி 20ல் அமலுக்கு வந்தது. 6 மாத காலம் இது நடைமுறையில் இருக்கும். நிரந்தர ஒப்பந்தம் ஏற்பட புதிதாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இரு தரப்பும் பங்கேற்கும் அடுத்த சுற்று பேச்சு வியன்னாவில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT