உலகம்

எல்லோருக்குமான வளர்ச்சியே ஐ.நா. நோக்கமாக இருக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வறுமை ஒழிப்பும் எல்லோருக்கும் சம வாய்ப்பளிக்கும் வளர்ச்சியுமே ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட செயல்பாடுகளின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அலோக் குமார் முகர்ஜி குறிப்பிட்டார்.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட (யுஎன்டிபி) செயற்குழுவின் 2014-ம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் அலோக் குமார் முகர்ஜி பேசுகையில், “வறுமை ஒழிப்பு, எல்லோருக்குமான வளர்ச்சியுமே யு.என்.டி.பி.யின் முக்கிய திட்டங்களின் தெளிவான நோக்கமாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் யு.என்.டி.பி. முக்கிய திட்டங்களை செயல்படுத்தும்போது, இதுவே அதன் செயல்பாடுகளை வழிநடத்தும் ஒரே நோக்கமாகவும், பணிகளை மதிப்பீடு செய்வதற்கான அளவீடாகவும் இருக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “யு.என்.டி.பி. திட்ட வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முன்னுரிமைத் திட்டங்களில், வறுமை ஒழிப்பு குறித்து எதிலும் குறிப்பிடப்படவில்லை. இது வியப்புக்குரியது. வறுமை ஒழிப்பே முக்கியத் திட்டமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

யு.என்.டி.பி.யுடன் நிதியாதாரத்துக்கும் இந்தியா கணிசமாக உதவி வருகிறது. உலக வளர்ச்சியில் யு.என்.டி.பி.யின் முயற்சிகள் வெற்றிபெற நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம்” என்றார்.

“நீ பார்த்த பரம ஏழை மற்றும் நலிந்த மனிதனின் முகத்தை நினைத்துப்பார், நீ மேற்கொள்ளும் நடவடிக்கையால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என உனக்கு நீயே கேட்டுப்பார்” என்று மகாத்மா காந்தி கூறியதையும் அலோக் குமார் முகர்ஜி நினைவு கூர்ந்தார்.

யு.என்.டி.பி.யின் செயற் குழுவில் 36 நாடுகளின் பிரதிநிதி கள் இடம்பெற்றுள்ளனர். உலக நாடுகளை 5 பிராந்தியங்களாகப் பிரித்து, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி அடிப்படையில் இதில் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட செயல்பாடுகளுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்கிறது. திட்டம் செயல்படுத்தப்படும் நாடுகளின் புதிய தேவைகளுக்கு யு.என்.டி.பி. தொடர்ந்து பொறுப்பேற்பதையும் இக்குழு உறுதிப்படுத்தும்.

SCROLL FOR NEXT