உலகம்

வியட்நாமுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை தளர்த்தியது அமெரிக்கா

ஏஎஃப்பி

வியட்நாமுக்கு ஆயுதம் விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள 40 ஆண்டு கால தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. தென் சீனக் கடலில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

1975-ம் ஆண்டு வியட்நாம் போர் முடிவுக்குப் பிறகு, வியட்நாமுக்கு ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது முதல்முறையாக இத்தடையில் இருந்து கடற்படை சாதனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை வியட்நாம் வெளியுறவு அமைச்சர் பாம் பின் மின் வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த சந்திப்பின் விளைவாக 40 ஆண்டுகால தடையில் ஒரு பகுதியை நீக்குவதாக ஜான் கெர்ரி அறிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, “மனித உரிமைகள் தொடர்பானவியட்நாமின் நடவடிக்கையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் ஆயுத விற்பனைக்கான ஒட்டுமொத்த தடையையும் விலக்கிக் கொள்வது குறித்து அமெரிக்கா ஆராயும்” என்றார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி கூறும்போது, “இந்த நடவடிக்கை திடீர் ஆர்வம் கொண்டு எடுக்கப்பட்டதல்ல. அந்த பிராந்தியத்தின் தேவையை கருதி எடுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய தங்கள் கடற்பகுதியில் பாதுகாப்பில் வியட்நாம் பின்தங்கியிருப்பதாலும், அமெரிக்காவின் தேசிய நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தென் சீனக் கடல் பகுதியில் சீரான வர்த்தக நடவடிக்கைகளுக்கு நமது நண்பர்களின் கரத்தை வலுப்படுத்துவது அவசியம்” என்றார்.

உலகில் கடல் மார்க்கமாக நடைபெறும் வர்த்தகத்தில் 40 சதவீதம் தென் சீனக்கடல் வழியாக நடைபெறுகிறது. இந்தக் கடல்பகுதி வியட்நாம், தைவான், ப்ரூனே, மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது. என்றாலும் இப்பகுதியில் சீனாவின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக பிற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

SCROLL FOR NEXT