சிரியாவில் நடக்கும் சண்டை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனைத்து தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐநா கூறியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறும்போது, "சிரியாவில் நடக்கும் சண்டை தொடர்பாக ஐநா தரப்பில் இருபுறத்திலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து சிரிய அரசு மற்றும் கிளர்ச்சிப் படைகள் ஜெனிவாவில் இந்த வாரம் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன" என்றார்.
முன்னதாக சிரிய தலைநகர் டமாஸ்கஸ் நகரில் அரசு மற்றும் கிளர்ச்சிப்படைகளுக்கு இடையில் கடந்த 10 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அரசு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.