வட கொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சம்பிரதாயம் போன்றது. நாட்டின் 687 தொகுதிகளிலும் அரசால் நிறுத்தப்படும் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்கின்றனர். மேலும் வாக்குப் பதிவும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் அரசு செய்தி நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், “ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அரசு பதிவு பெற்ற 99.97 சதவீத மக்களும் வாக்களித்தனர். இத் தேர்தலில் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் அரசுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் வட கொரிய அதிபர் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் அனைத்து வாக்குகளும் அதிபருக்கு ஆதரவாக பதிவாகியது. இதன் மூலம் அவர் 100 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வட கொரிய அதிபரான கிம் ஜோங் உன் கடந்த 2011-ம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.