உலகம்

ஹாலிவுட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீர்: ஒபாமா

செய்திப்பிரிவு

வன்முறை மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்று ஹாலிவுட் சினிமா துறைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவன விழாவில் பங்கேற்ற அவர் பேசும்போது, "துப்பாக்கிச் சூடு வன்முறைகள் அதிகரிக்காமல் இருக்க, திரைப்படங்களில் துப்பாக்கி வன்முறையை பெருமைக்குரிய வகையில் காட்டக்கூடாது. ஏனெனில் நீங்கள் சித்திரிக்கும் கதைகள் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஹாலிவுட் பிரமுகர்கள் சிலர் துணை அதிபர் ஜோ பிடன் உடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தைகள் பாதுகாப்பில் ஹாலிவுட்டின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்கள் தொடர வேண்டும்.

திரைப்படங்கள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பரப்புவதாகவும், சகிப்புத் தன்மை மற்றும் பன்முகத்தன்மையைக் கற்றுத்தருவதாகவும் இருக்க வேண்டும். துன்பத்திலிருந்து மீண்டு வரும் திறனும், படைப்பாக்கத்திறனும் நம் மரபணுவில் கலந்திருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துவதாக இருக்க வேண்டும்" என்றார் பராக் ஒபாமா.

SCROLL FOR NEXT