உலகம்

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: குற்றவாளிகளைக் கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர் சபதம்

ஏஎஃப்பி

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான போரில் ராணுவத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் நிறைய பேர் கொல்லப்பட இருக்கிறார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சபதம் ஏற்றுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை ரோட்ரிகோ டியுடெர்ட் கூறும்போது, "போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான போரில் இன்னும் நிறைய குற்றவாளிகளை கொல்ல சபதம் ஏற்றுள்ளேன்.

இதற்கு ராணுவத்தைப் பயன்படுத்த இருக்கிறேன். போதைப் பொருட்கள் விவகாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி ஆயுதப் படையின் உதவியை கோர இருக்கிறேன்" என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதற்காக ஜனநாயக முறைகளற்ற விதத்தில் உத்தரவிட்டு வருகிறார்.

டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த ஆண்டு ஜுன் 30-ஆம் தேதி பதவி ஏற்றது முதல் குற்றவாளிகள் என 5,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT