சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்த நாட்டு பெண்கள் போராடி வரும் நிலையில் தற்போது இணைய தளம் வாயிலாக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கார் ஓட்டக் கூடாது, ஆண்கள் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அங்கு அமலில் உள்ளன. இதனை மீறும் பெண்களுக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
சவூதி அரேபிய பெண்கள் தடையை மீறி கார்களை ஓட்டி வருகின்றனர். தங்களது போராட்டத்தை வலுப் படுத்தும் வகையில் புதிய இணைய தளத்தைத் தொடங்கி அதன் மூலமும் உரிமைக்காக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை அந்த இணைய தளத்தில் 2800 பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய வெற்றி என்று சவூதி அரேபியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் கண்டிப்பாக கார் ஓட்டக்கூடாது, தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கார் ஓட்டும் பெண்களை ஆதரிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.