உலகம்

பிரிட்டனில் ஆளும் கூட்டணிக்கு நெருக்கமான இந்திய தொழிலபதிபர் சுதிர் சௌத்ரி கைது

செய்திப்பிரிவு

இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய தொழிலதிபர் சுதிர் சௌத்ரி மற்றும் அவரது மகன் பானு ஆகியோர் லஞ்ச வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்டது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கூட்டணி அரசில் லிபரல் டெமாக்ரட் கட்சித் தலைவர் நிக்க்ளெக் துணைப் பிரதமராக உள்ளார். இவரது கட்சிக்கு சுதிர், பானு ஆகிய இருவரும் முக்கிய கொடையாளர்கள்.

இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை பிரிட்டனில் கடும் முறைகேடுகள் ஒழிப்புத் துறை (எஸ்எப்ஓ) சார்பில் கைது செய்யப்பட்டனர். பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சுதிர் சௌத்ரி, பானு ஆகிய இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். இருவரும் தங்கள் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளனர்” என்றார்.

பிரிட்டனில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் டெமாக்ரட் கட்சிக்கு 2004 முதல் சுதிர் சௌத்ரி சுமார் 10 லட்சம் பவுண்ட் நன்கொடை அளித்துள்ளார். இக்கட்சித் தலைவர்கள் சுதிருடன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில், சுதிர், பானு கைது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிபரல் டெமாக்ரட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சுதிர் சௌத்ரி மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிவோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுவதால் தற்போது கருத்து எதுவும் கூற முடியாது” என்றார்.

சுதிர் சௌத்ரி 2002-ல் பிரிட்டனில் குடியேறினார். அவரது மகன் பானு சௌத்ரி பிரிட்டனின் பல்வேறு இடங் களில் மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் நடத்தி வருகிறார். இதுதவிர ரியஸ் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களும் செய்கிறார்.

ஆயுத விற்பனையில் இடைத் தரகராக செயல்படுவதாக சுதிர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவரது நேரடித் தொடர்பு குறித்து வலுவான ஆதாரங்கள் இதுவரை சிக்க வில்லை.

SCROLL FOR NEXT