உலகம்

எரிமலை வெடிப்பால் ஜப்பான் அருகே புதிய தீவு உதயம்

செய்திப்பிரிவு

பசிபிக் பெருங்கடலில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்புகளால் ஜப்பான் அருகே குட்டித் தீவு புதிதாக உருவாகியுள்ளது என, ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் புவி அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுதீவு 660 அடி சுற்றளவு கொண்டது. போனின் தீவுகள் என அழைக்கப்படும் ஆளில்லாத் தீவு அருகே இந்த புதிய சிறு தீவு உருவாகியுள்ளது என ஜப்பான் வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோவிலிருந்து தென் திசையில் 1,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் 30 சிறு தீவுகள் உள்ளன. இவை, பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் எரிமலை வெடிப்புகளால் உருவானவை.

எரிமலை தொடர்ந்து குழம்பை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் அடர்கரும்புகை, சாம்பலுடன் வெளியேறியபடி உள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புதிய தீவு விரைவில் கரைந்து விடும் என எரிமலை ஆய்வு நிபுணர் ஹிரோஷி தெரிவித்துள்ளார். நிரந்தரமாக இருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார். கடந்த 1970ஆம் ஆண்டுகளின் மத்தியில் இப்பகுதியில் உள்ள எரிமலைகள் குமுறத் தொடங்கின. அதற்குப் பிறகு தற்போதுதான் எரிமலைகள் லேசாகக் குமுறி வருகின்றன.

இப்பகுதியில் உள்ள பெரும்பாலான எரிமலைகள் இஸு-ஓகாஸவரா கடல் அகழி மற்றும் மரியானா கடல் அகழியிலும் உள்ளன. கடல் அகழி என்பது கடலுக்கு அடியில் உள்ள பெரும்பள்ளம். உலகின் மிக ஆழமான கடல் அகழி மரியானா கடல் அகழி ஆகும். இதன் ஆழம் 10.911 கி.மீ அல்லது 10,911 மீட்டர் (40 மீட்டர் கூடுதல் அல்லது குறைவு) 36 ஆயிரத்து 69 அடிகள் ( 131 அடி கூடுதல் அல்லது குறைவு).

ஜப்பான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறுகை யில், “எவ்வளவு சிறிய தீவாக இருந்தாலும், அது ஜப்பானின் ஆட்சிப் பரப்புக்குள் வருவது வரவேற்கத்தக்கது. இது போன்று ஏற்கெனவே பல தீவுகள் உருவானதும், காணாமல் போனதும் நிகழ்ந்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT