உலகம்

வான் பயண சுதந்திரம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சூளுரை

செய்திப்பிரிவு

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், வான் பயண சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஜப்பான் மற்றும் 10 தென் கிழக்கு ஆசிய நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

இந்நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சந்தித்துப் பேசினர். இம்மாநாட்டுக்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனா தனது வான் எல்லையை விரிவாக்கும் வகையில் கடந்த மாதம் புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் பின்னணியிலேயே இம்மாநாடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இந்நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் சீனாவின் வான் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிகளின் கீழ், வான் பயண சுதந்திரம், பாதுகாப்பான விமானப் போக்குவரத்து ஆகியவற்றை உறுதிப்படுத்த 11 நாடுகளும் இணைந்து செயல்படுவது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை தங்களுக்குள் வலுப்படுத்தவும் இந்நாடுகள் முடிவு செய்துள்ளன.

முன்னதாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவற்றின் வளர்ச்சிக்கும் இயற்கை பேரிடர் நிவாரணப் பணிகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1,926 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் அறிவித்தது. மேலும் ஜப்பான் – ஏசியன் ஒருங்கிணைந்த நிதிக்கு மேலும் 10 ஆயிரம் கோடி டாலர்கள் உதவி வழங்குவதாக ஜப்பான் உறுதி அளித்தது. மேலும் இந்நாடுகளுக்கு கடல் எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பில் உதவி, பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள் உள்பட பல்வேறு வகையில் உதவிட ஜப்பான் முன்வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் மேலாதிக்கத்தால் பெரும்பாலான தென் கிழக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டன. ஜப்பானின் ராணுவ பலம் அதிகரிப்பதை அந்நாடுகள் விரும்புவதில்லை. என்றாலும் ஜப்பானைப் போலவே தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சீனாவுடன் எல்லை பிரச்சினை இருந்து வருவதால், அவை ஜப்பானுடன் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றன.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்துவரும் சென்காகு தீவுகளை உள்ளடக்கி கடந்த மாதம் 23ம் தேதி சீனா புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது. சீனாவின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என ஜப்பான் அறிவித்தது. இதனால் கிழக்கு சீனக் கடல் பகுதி தற்போது பதற்றமான பகுதியாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT