பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்துக் கோயிலைத் தாக்கி தர்மசாலாவுக்கு மர்ம கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது. அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணம் லர்கானா நகரில் முஸ்லிம்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இதையடுத்து வன்முறைக் கும்பல் இந்துக் கோயிலைத் தாக்கி, அருகேயிருந்த தர்ம சாலாவுக்குத் தீ வைத்தது.
பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டு எச்சரித்தும் வன்முறைக் கும்ப லைக் கலைத்தனர். ஜின்னா பாக் பகுதியிலும், வேறு சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “முஸ்லிம்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாகத் தகவல் பரவியதும், அப்பகுதி யைச் சேர்ந்த சிலர் புனித நூலை அவமதித்த நபரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோஷமிட்டனர்” என்றனர்.
அப்பகுதி இந்து ஊராட்சியின் தலைவர் கல்பனா தேவி கூறுகையில், “இங்குள்ள இந்து சமூகத்தினர் மற்ற மதத்தினரை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொண்டது கிடையாது. அது போன்ற செயலை மனதால் கூட நினைக்க மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் போதைப்பழக்கத்துக்கு அடிமையா னவர்” என்றார்.