இருதரப்பு உறவு ஏற்பட வேண்டும் என்றால் அரசியல் சார்ந்த கோரிக்கைகளை அமெரிக்கா வைக்கக்கூடாது என கியூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவு செய்து சனிக்கிழமை பேசியதாவது:
அரசியல் சார்ந்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிடாமல் தொடர்ந்தால் அந்நாட்டி லிருந்து எத்தனை ஆண்டுகளுக்கும் எட்டவே கியூபா நிற்கும். அதனுடன் உறவுக்கு வாய்ப்பே ஏற்படாது. உறவு மேம்பட வேண்டும் என்றால் தமக்குள் உள்ள வேறுபாடுகளுக்கு மரியாதை தரவும் அமைதியுடன் இணக்கமாக வாழவும் பழகிக்கொள்வது இருதரப்புக்கும் அவசியம். இல்லையெனில் இது போலவே இன்னும் 55 ஆண்டுகளுக்கு இருக்கவும் தயாராக இருக்கிறது கியூபா.
தமது அரசியல், சமூக அமைப்புகளை அமெரிக்கா மாற்ற வேண்டும் என்பது கியூபாவின் கோரிக்கை அல்ல. அதுபோலவே கியூபா அரசியல், சமூக அமைப்புகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமெரிக்கா வந்தால் அதை ஏற்கமாட்டோம். கியூபாவின் சுதந்திரம், தன்னாட்சிக்கு துளியும் பாதிப்பு வராது என்றால் பேச்சு வார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம் என்றார் ரவுல் காஸ்ட்ரோ.
அமெரிக்கா-கியூபா இடையே இரு தரப்பு உறவு இல்லை. கம்யூனிஸ்ட் நாடான கியூபா மீது 1962-ம் ஆண்டிலிருந்தே பொருளா தார தடை விதித்துள்ளது அமெரிக்கா. கியூபா ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டால்தான் அதனுடன் உறவு ஏற்பட அமெரிக்க சட்டம் அனுமதிக்கும், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையடுத்து இறுதி அஞ்சலி செலுத்த கடந்த 10ம் தேதி ஜோகன்னஸ்பர்க் சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காஸ்ட்ரோவுடன் கை குலுக்கியது உலகின் கவனத்தை ஈர்த்தது.
தொழிலதிபர்களுக்கு எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் பேசிய ரவுல் காஸ்ட்ரோ, “நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவு படுத்தவேண்டும், விரிவுபடுத்தவேண்டும் என்று கியூபா அரசை தொழிலதிபர்கள் நிர்ப்பந்திக்கக் கூடாது. அப்படி நிர்ப்பந்திக்கும்போது நாட்டுக்குத் தோல்விதான் ஏற்படும். எந்த நட வடிக்கை எடுத்தாலும் அதனுடன் ஒழுங்குமுறை தேவை” என்றார்.
தனியார் சிறு தொழில் துறையினருக்காக சுமார் 200 பிரிவுகளை ஒதுக்கியுள்ளது கியூபா. அதேவேளையில் அரசு நிறுவனங்களுடன் இவை அதிக அளவில் போட்டிபோடக்கூடாது என்கிற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய கியூபா இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
தவறு செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிச் செல்லாதவகையில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அதிபர், இத்தகைய நிலைமைக்காக அதி காரிகளை குறை கூறினார்.