காஷ்மீர் மாநில பிரச்சினைக்கு இந்தியாவும், பாகிஸ்தானுமே தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் எலிசபத் ட்ராட் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின்போது ட்ராட்டிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், "காஷ்மீர் மீதான அமெரிக்க நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிப்பது இந்தியா, பாகிஸ்தான் விருப்பங்களுக்கு உட்பட்டது. இவ்விவகாரத்தில் இணக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் எடுக்கும் முடிவுகளை அமெரிக்கா ஆதரிக்கும். காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை கவனித்து வருகிறோம். அங்கு நடக்கும் வன்முறைகள் வேதனை அளிக்கிறது. அமைதியான உடன்படிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.
அதேவேளையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான சர்ச்சைகள் குறித்து பிரதமர் மோடியின் பேச்சு மீது கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
மோடி சொன்னது என்ன?
"செங்கோட்டையில் இருந்தபடி இந்த இனிமையான தருணத்தில் ஒரு சில மக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். பரலூசிஸ்தான், கில்ஜித் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், அவர்களது பிரச்சினையை எழுப்பியதற்காக எனக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.