உலகம்

இருளில் மூழ்கியது அமெரிக்கா: சூறாவளிக்கு 35 பேர் பலி

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் 3 நாட்களாக வீசிய கடும் சூறாவளி காற்றுக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உருவாகிய சூறாவளி 200 மைல் தொலைவிலுள்ள குவாபாவ் பகுதியில் மையம் கொண்டது. அங்கிருந்து லிட்டில்ராக் பகுதியின் வடமேற்கில் 22 மைல்கள் தொலைவிலுள்ள மே பிளவர் வழியாக சுழற்றி சென்றது.

பலத்த சூறைக்காற்றால் வீடுகளின் கண்ணாடி ஜன்னல் நொறுங்கின. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன. மின்சார கம்பிகள் அறுந்து சாலைகளில் விழுந்துள்ளதால் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இதனால் வின்ஸ்டன், மிஸிசிபி, அலபாமா, ஆர்கன்சஸ் உள்ளிட்ட இடங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க மாகாண ஆளுனர்கள் அறிவுறுத்ததியுள்ளனர். பழைய கட்டிடங்கள் பல சூறாவளி தாக்கியதில் இடிந்து விழுந்தது. இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வாகனங்களில் சென்றவர்கள் சாலைகளில் அப்படியே வாகனங்களை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் அடைந்தனர். அதிவேகமாக சூறாவளி காற்று வீசியதில் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்து சாலைகளில் சாய்ந்து நிற்கின்றன.

முன்னதாக நேற்று அலபாமாவில் இதுபோன்று மேலும் சூறாவளி தாக்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை சேவை மையம் எச்சரிக்கை விடுத்ததால் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக மிஸிசிபி மற்றும் ஓக்லஹோமா ஆகியன அரியப்படுகின்றது.

SCROLL FOR NEXT