உலகம்

இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களை ஒப்படைக்க வேண்டும்: சம்பந்தன் வலியுறுத்தல்

பிடிஐ

‘‘இலங்கையில் போரின் போது தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை ராணுவம் திரும்ப ஒப்படைக்காமல் தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்’’ என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நாடாளுமன்றத் தில் கொண்டு வரப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று பேசியதாவது:

இலங்கையின் வடக்கில் வாழும் சிறுபான்மை தமிழர்களின் பெரும்பாலான நிலங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க கால தாமதம் செய்யப்படுகிறது. தமிழர்களுக்கு அவர்களுடைய நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அது எங்கள் உரிமை. எங்கள் பிறப்புரிமை. அந்த நிலங்களை நீங்கள் கைப்பற்றி வைத்துக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி குறித்து பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறோம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பல வழிகளில் உதவி வருகிறது. பல ஆண்டு கள் பேச்சுவார்த்தை நடந்தும் இதுவரை இலக்கு எட்டப்பட வில்லை.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு வந்தார். நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, ‘‘இலங்கையின் வளர்ச்சியும் ஒருமைப்பாடும் இந்தியாவின் பலத்துக்கு ஆதாரம்’’ என்று கூறினார். இதை விட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?

இலங்கையில் வாழும் தமிழர்கள் மதிப்புடனும் சுய மரியாதையுடனும் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கை என்பதைத்தான் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கேற்ப வடக்கு முதல் கிழக்கு வரை அரசியல் அதிகாரப் பரவல் இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு முழு அளவில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள வற்றை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஆர்.சம்பந்தன் பேசினார்.

அதற்குப் பதில் அளித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறும்போது, ‘‘தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க கால அளவு நிர்ணயிக்க ராணுவத்துக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

மேலும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 2,400 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4,100 ஏக்கர் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT