இலங்கையிலிருந்து முதன் முறையாக அடைக்கலம் தேடி நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 75 பேரை இலங்கை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன கூறியதாவது:
தென்மேற்கு மீன்பிடி துறை முகமான பெருவலாவிலிருந்து சட்டவிரோதமாக பயணம் செய்ய முயன்ற 9 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 75 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசரணை மேற்கொண்டதில், அவர்கள் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அகதிகளாக நியூசிலாந்துக்கு செல்ல முற்பட்டதும் தெரியவந்தது என்றார்.
இலங்கை தமிழர்கள் படகு முலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வது வழக்கமாக உள்ளது. சமீபத்தில்கூட சட்டவிரோதமாக தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற 45 இலங்கைவாசிகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் முதன்முறையாக தமிழர்கள் நியூசிலாந்துக்கு செல்ல முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.