உலகம்

சீக்கியர் கலவரம்: சோனியாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

டெல்லியில் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்புள்ளது. அவர்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயற்சி செய்கிறார். இது மனித உரிமை மீறலாகும் என்று குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட மனுவை சீக்கிய அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

கடந்த புதன்கிழமை தனது மனுவை தாக்கல் செய்த சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு, இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மொத்தம் 38 பக்கங்களைக் கொண்ட அந்த மனுவில், சோனியா காந்தி உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே சீக்கியர் கலவரத்தில் தொடர்புடைய கட்சித் தலைவர்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார். அவரிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் சீக்கிய அமைப்பு கோரியுள்ளது.

இந்த புகார் தொடர்பாக தனது பதிலை அளிக்க சோனியா காந்திக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை அமெரிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் சீக்கியர்கள் மீது வன்முறை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என சீக்கியர்களுக்கான நீதியமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT