உலகம்

தொடரும் இனவெறி தாக்குதல்: அமெரிக்காவில் சீக்கியர் மீது துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் சீக்கிய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர், "உனது நாட்டுக்கு திரும்பிச் செல்" என்று கோஷமிட்டுக் கொண்டே தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சீட்டல் டைம்ஸ் பத்திரிகையில், "கென்ட் மாகாணத்தில் வசித்து வரும் அந்த சீக்கியர் (39) வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. சீக்கியரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், துப்பாக்கியால் அந்த சீக்கியரை தாக்கியுள்ளார். இதில் அந்த சீக்கியரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் அந்த மர்ம நபர், "உனது நாட்டுக்கு திரும்பிச் செல்" என்று கோஷமிட்டுள்ளார். அந்த மர்ம நபர் முகமூடி அணிந்திருந்தார். இது தொடர்பாக கென்ட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்ட் போலீஸ் தரப்பில், "தாக்கப்பட்ட சீக்கியருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை மிகுந்த சிரத்தையுடன் விசாரித்து வருகிறோம். எப்.எபி.ஐ புலனாய்வு நிறுவனம், பிற சட்ட அமலாக்கப் பிரிவுகளின் உதவிகளையும் அணுகியிருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதுபோன்ற சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது அவர்களின் தோற்றத்தை காரணம் காட்டியும், அவர்களது வாழ்வியல் முறையை சுட்டிக் காட்டியும் நடத்தப்படும்போது மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படும்" என கென்ட் போலீஸ் கமாண்டர் ஜெரோட் கான்செர் தெரிவித்துள்ளார்.

தொடரும் தாக்குதல்:

கன்சாஸ் நகரில் 32 வயது இந்தியப் பொறியாளர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டர். அதன் தொடர்ச்சியாக தெற்கு கரோலினாவின் லங்காஸ்டர் கவுண்டியில் கடை நடத்தி வந்த ஹர்னிஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களில் அதிர்ச்சியும் வலியும் குறைந்து விடாத நிலையில் அப்பாவி சீக்கியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT