நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டோர் அண்டை நாடான கேமரூனின் ராணுவ உதவியுடன் கொல்லப்பட்டதாக நைஜீர்ய அரசு தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்குள்ள கிறுஸ்துவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தாக்கும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அண்டை நாடுகளின் உதவியை நைஜீரியா நாடியது.
இந்த நிலையில், போகோ ஹராம் தீவிரவாதிகள் 100-க்கு மேற்பட்டோரை அண்டை நாடான கேமரூனின் ராணுவம் அழித்ததாக நைஜீரியாவின் அரசு வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நைஜீரிய அரசு செய்தி தொடர்பாளர் கூறும்போது, "போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு இதுவரை கேமரூன் ராணுவம் மிகப் பெரிய பின்னடைவுகளை தந்துள்ளது. அது போல மீண்டும் ஒரு முக்கிய அடிதான் இது.
சனிக்கிழமை அன்று கம்பாரு நகாலாவில் உள்ள நமது பாதுகாப்பு படைகளை குறிவைத்து போகோ ஹராம் குண்டுகளை வீசினர். இதற்கு பதிலடி தரும் விதமாக அவர்களை நோக்கி கேமரூன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து தற்போதைய நிலையில் விரிவான அறிக்கை வெளியிட முடியாது" என்றார்.
கம்பாரு நகாலா பகுதி, கேமரூன் நாட்டு எல்லையில் உள்ளது. நைஜீரியாவின் மேற்கு பகுதிகள் பலவற்றை போகோ ஹராம் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால் அச்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கேமரூன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.