வெள்ளை மாளிகைக்கு மோடி வந்ததும், அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்று ஓவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் வெள்ளை மாளிகையை மோடிக்கு அதிபர் ட்ரம்ப் சுற்றிக் காட்டினார். முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் படுக்கை அறை உட்பட பல இடங்களை ட்ரம்ப் சுற்றிக் காட்டினார். கடந்த 1863-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பென்சில்வேனியாவின் ‘கெட்டிபர்க்’ நகரில் லிங்கன் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அந்த உரையை லிங்கன் அமர்ந்து எழுதிய மேசை மற்றும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் நகல் ஆகியவற்றை மோடிக்கு ட்ரம்ப் காட்டினார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள ‘புளூ ரூமில்’ இரவு சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் மோடி கூறும்போது, ‘‘எனக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்புக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவின் முதல் பெண்மணிக்கு (மெலானியா) மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இந்த வரவேற்பு, இந்தியாவில் உள்ள 1.24 பில்லியன் மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு’’ என்றார்.
பின்னர், அதிபர் ட்ரம்ப் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.