பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுடன் தங்கள் பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்வதாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சித் தலைவர் தாஹிர் உல் காத்ரியும் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத் முழுவதும் இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 300 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து காத்ரி கூறும்போது, “இஸ்லாமாபாத் மற்றும் நாடு முழுவதில் எங்கள் கட்சியினரை அரசு கைது செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் நாங்கள் பேச்சுவார்த்தையை சஸ்பெண்ட் செய்கிறோம்” என்றார்.
மற்றொரு தலைவரான இம்ரான் கான் கூறும்போது, “எங்கள் கட்சியினர் மட்டுமன்றி எனது பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையில் நாட்டின் தலைமை நீதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் சாலைகளை மறித்து, எனது கட்சி ஆதரவாளர்களை போராட்டத்துக்கு வரவிடாமல் அரசு தடுக்கிறது. மேலும் குண்டர்கள் மூலம் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இடையே அரசு அச்ச உணர்வை ஏற்படுத்த முயலுகிறது” என்றார்.
இந்நிலையில் தற்போதுள்ள சூழலில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று இம்ரான்கான் கட்சியின் பொதுச் செயலாளர் ஜஹாங்கிர் கான் கூறினார். “எங்களின் இறுதியான கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துவிட்டோம்” என்றார் அவர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் முறைகேடுகள் செய்து ஆட்சிக்கு வந்ததால் அவர் பதவி விலகவேண்டும் என்று கூறி இம்ரான் கானும், தாகிர் உல் காத்ரியும் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இஸ்லாமாபாத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.