இராக்கில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசு ஆலோசித்து வரும் நிலையில், அதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரிக்கை வீடியோ ஒன்றை அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் அல் ஹயாத் ஊடக குழுமம் என்ற இணையதளத்தின் வழியாக அந்த இயக்கம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. திரைப்படங்களின் முன்னோட்டம் போல உள்ள அந்த வீடியோ 52 வினாடிகள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
'போர் தீப்பிழம்பு' என்று பெயரிடப்பட்ட அந்த வீடியோவில், இராக்கின் பல நகரங்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் காட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, "ஐ.எஸ்-ஸை வீழ்த்த தரைப்படை அனுப்பப்படாது" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும் காட்சி வருகிறது.
இதன் பின்னர், அமெரிக்கத் தரைப்படையை வரவேற்கிறோம் என்று தெரிவித்து 'தாக்குதல் இனிதான் ஆரம்பம்' என்ற வாசகத்தோடு வீடியோ முடியும் வண்ணம் காட்சிகள் உள்ளன.
சிரியா, இராக்கில் பல நகரங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், இதுவரை மூன்று படுகொலைகளை நடத்தி அதன் வீடியோவை வெளியிட்டு மிரட்டல் விடுத்தனர்.
அந்த இயக்கத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. ஏற்கெனவே ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் நிலையில், சண்டையை தீவிரப்படுத்த தரைவழித் தாக்குதலுக்கு கடந்த சில நாட்களாக அந்த நாடு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.