உலகம்

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ் தானுக்கு எதிராக சதி செய்ததாக வும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாக வும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தகவலை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் காமர் ஜாவ்த் பஜ்வா உறுதி செய்துள்ளார். அந்த நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்ட குல்பூஷண் சுதிர் ஜாதவ் என்ற ஹூசைன் முபாரக் படேலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜாதவ் கைது செய்யப்பட்ட போது இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் அளித்த விளக்கத்தில், பணிக்காலத்துக்கு முன்பு குல்பூஷண் ஜாதவ் ஓய்வுபெற்றுவிட்டார். இந்திய கடற்படைக்கோ, ரா உளவுத் துறைக்கோ அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

குல்பூஷண் ஜாதவ் யார்?

குல்பூஷண் ஜாதவ்

குல்பூஷண் ஜாதவின் பாஸ்போர்ட் விவரங்களைப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அதில் குல்பூஷணின் பெயர் ஹூசைன் முபாரக் படேல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கி பகுதியில் பிறந்தவர். ஈரானின் சாபஹார் துறைமுகத்தில் ஜாதவ் வர்த்தகம் செய்து வந்துள்ளார். ஈரானில் இருந்த அவரை தலிபான்கள் சிறைபிடித்து பாகிஸ்தான் உளவுத் துறையிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016 மார்ச் 29-ல் பாகிஸ்தான் ராணுவம் ஓரு வீடியோவை வெளியிட்டது. அதில் 2013-ல் இந்திய கடற்படையை விட்டு விலகி, ரா உளவுத் துறையில் சேர்ந்ததாகவும் பலுசிஸ்தான், கராச்சியில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் குல்பூஷண் ஜாதவ் கூறியுள்ளார். ஆனால் ஜாதவை துன்புறுத்தி இந்த வீடியோவை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT