டாக்காவில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த மறைவிடத்தை போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாக முதல்வர் ஷெய்க் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 5.51 மணியளவில் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஜஹாஸ் என்ற கட்டிடத்தைப் போலீஸார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஜமாதுல் முஜாஹிதின் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக் கருதப்படும் 20 முதல் 25 வயதுள்ள தீவிரவாதிகள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தோட்டாக்காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் போலீஸ் அதிகாரி ஷாகிதுல் ஹக் தெரிவித்தார்.
ராகிபுல் ஹசன் என்கிற ரிகான் என்ற தீவிரவாதி கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வருபவர், இந்த சண்டையில் காயமடைந்துள்ளார். இவர் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
13 கையெறி குண்டுகள், ஒரு வாள், ஒரு துப்பாக்கி அவர்களின் மறைவிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 7 பத்திரிகைகளும் ஏராளமான தோட்டாக்களும் கூட அங்கிருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச உயர் பாதுகாப்பு மண்டலமான கஃபே ஒன்றில் சமீபத்தில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியப் பெண் உட்பட 22 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, ஈத் வழிபாட்டின் போது மிகப்பெரிய தாக்குதல் போலீஸின் முயற்சியினால் சிறிய பாதிப்போடு முடிவடைந்தது, இந்தச் சம்பவங்களை அடுத்து வங்கதேசத்தில் பயங்கரவாத அச்சம் கடுமையாகத் தலைதூக்கியுள்ளது.