அமெரிக்காவில் டெக்சாஸ் ராணுவ தளத்தில் சக வீரர்கள் 4 பேரைச் சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர்.
அந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் ஐவன் லோபெஸ்(34) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஃபோர்ட் ஹூட் என்கிற இடத்தில் உள்ள மருத்துவ அணி மீது லோபஸ் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தொடர்ந்து போக்குவரத்து அணியைத் தாக்கினார். இந்தத் தாக்குதல்களில் 16 பேர் காயமுற்றனர். அப்போது அவரிடம் ராணுவத்துக்குச் சொந்தமில்லாத ‘.45 காலிபர் ஸ்மித் அண்ட் வெஸ்ஸன்' ரக துப்பாக்கி இருந்தது. அவர் மேலும் முன்னேறுவதை ராணுவ போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் துப்பாக்கியால் தன் தலையில் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐவன் லோபெஸ் ஈராக்கில் நடந்த போரில் சுமார் நான்கு மாத காலம் ஈடுபட்டவர் என்றும், அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகலும் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கெனவே 2009ம் ஆண்டில், இதே ராணுவ தளத்தில், மேஜர் நிடால் ஹசன் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்ததுடன் 30 பேர் காயமுற்றனர். அவருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் அத்தகையதொரு சம்பவம் நடந்திருப்பதால் அங்கு மிகவும் பரபரப்பு நிலவுகிறது.