உலகம்

மனித உடலைச் சிதைக்கும் சித்ரவதை ஆயுதங்கள்: சீனா மீது ஆம்னெஸ்டி சாடல்

ஏபி

மனித உடலில் மின்சார அதிர்வைப் பாய்ச்சும் உபகரணம் முதல் பல்வேறு உடல் சிதைப்பு ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனா வளர்ந்து வருவதாக ஆம்னெஸ்டி அமைப்பு சாடியுள்ளது.

உடலில் மின் அதிர்வு பாய்ச்சும் சாதனம் மற்றும் கழுத்து மற்றும் மணிக்கட்டை இறுக்கி ரத்த ஓட்டத்தை நிறுத்தும் சங்கிலி என்று சித்ரவதை உபகரணங்கள் தொழிற்சாலை சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் 28-லிருந்து 130க்கும் அதிகமாகியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை என்றாலும் இதில் புதுமையைப் புகுத்தி புதுவகை சித்ரவதைகளை துரிதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பல கொடூரமாகவும் மனித விரோதமாகவும் உள்ளதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

ஆணிகள் நிரம்பிய தடிகள், விசாரணைக் கைதிகளை அமரவைக்கும் சித்ரவதை நாற்காலிகள் ஆகியவை மனித உடல்களில் இனம்புரியாத கடுமையான வலிகளை ஏற்படுத்தக் கூடியவை என்று ஆம்னெஸ்டி தனது 40 பக்க அறிக்கையில் கூறியுள்ளது.

"இத்தகைய கொடூரமான சித்ரவதை உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. இதன் நோக்கம் மனித உடலைச் சிதைப்பது தவிர வேறு எதுவுமாகவும் இருக்காது” என்று ஆம்னெஸ்டி அமைப்பின் பேட்ரிக் வில்கென் என்பவர் கூறினார்.

கைதிகள் மீது எந்த விதமான சித்ரவதைகளையும் மேற்கொள்வதில்லை என்று சீனா கடுமையாக மறுத்து வந்தபோதிலும், அங்கு உடல் ரீதியான சித்ரவதைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக ஆம்னெஸ்டி அமைப்பு ஆவண ரீதியாக நிரூபித்துள்ளது.

குறிப்பாக விசாரணைக் கைதிகளுக்கு மின் அதிர்வூட்டுதல் என்பது அங்கு சகஜம் என்கிறது ஆம்னெஸ்டி.

திங்களன்று ஜினுவா செய்தி ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையில், வட-மேற்கு சீனாவில் நீதிமன்றம் ஒன்று சித்ரவதை செய்ததற்காக 3 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 4 போலீஸ் அல்லாத அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது. கைதி ஒருவரை இரும்பு நாற்காலியில் கட்டிப் போட்டு மின் அதிர்வு கொடுத்ததையும் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்துள்ளார்.

அதுவும் இவ்வகை உபகரணங்களை மனித உரிமை, மனித நேயம் என்றால் என்னவென்றே தெரியாத கொடுங்கோல் நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நாடுகளாவன: கம்போடியா, நேபாளம், காங்கோ, எகிப்து, கானா, மடகாஸ்கர், செனகல், உகாண்டா.

சீனாவிலும் உள்நாட்டு சமூக பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உள்நாட்டு பாதுகாப்பிற்காக சீனா 125 பில்லியன் டாலர்கள் தொகையை செலவிட்டு வந்துள்ளது. இது அதன் கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT