உலகம்

கருக்கலைப்புச் சட்டத்தை கடுமையாக்கும் திட்டத்தை கைவிட்டது ஸ்பெயின்

ஏஎஃப்பி

கடுமையான போராட்டங்களுக்கு பிறகு ஸ்பெயின் அரசு கொண்டுவர இருந்த புதிய கருக்கலைப்பு சட்டம் கைவிடப்பட்டது. எனினும் சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பை அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்பெயினில் கருக்கலைப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது. எனினும் அதனை மேலும் கடுமையானதாக மாற்ற புதிய கருக்கலைப்பு சட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு சட்ட அமைச்சகம் முடிவு செய்தது. அதற்கான சட்ட நுணுக்கங்களை அந்நாட்டு அரசு வகுத்து வந்தது. ஸ்பெயின் அரசின் புதிய சட்டத் திட்டத்துக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஒரு ஆண்டாக அங்குள்ள பெண்கள் உரிமை கழகம், இந்த புதிய சட்டம் பெண்களின் உரிமைகளை 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி தள்ளுவதாகப் போராடி, பெண்களை மதத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் அடிமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர். இந்த போராட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிய சட்டத்துக்கு எதிராக திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து புதிய சட்டத்தை அமல்படித்துவது குறித்து அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 70-திலிருந்து 80% மக்கள் புதிய கருக்கலைப்பு சட்டம் பின்னோக்கியது என்று அதற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நிலையில் அரசியல் நெருக்கடிக்கு இடையே கருக்கலைப்பு சட்டம் கைவிடப்பட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் புதன்கிழமை அன்று அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, "கருக்கலைப்பு சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் கருத்தரித்த 14 வாரத்திற்குள் கருத்தரித்த பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறது. அரசு முன்மொழிந்த புதிய கருக்கலைப்பு சட்டம் கைவிடப்படுகிறது" என்றார்.

பெண்கள் கருவுற்ற 14 வாரங்களில் கருக்கலைப்பு செய்ய மனு அளிக்கலாம் என்பது புதிய கெடுபிடிச் சட்டத்தினால் மாற்றப்பட்டிருக்கக் கூடும். ஆனால் எதிர்ப்பினால் அது நடக்கவில்லை. ஒருவேளை பலாத்காரம் போன்ற சமூக குற்றங்களால் கருவுற்ற நிலை ஏற்பட்டாலோ அல்லது உடல் நலக் குறைவால் கரு சுமக்க முடியாமல் போனாலோ, பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அயர்லாந்தில் இந்தியாவைச் சேர்ந்த சவிதா என்ற பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. உடல் நிலை மோசமடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அயர்லாந்தில் போராட்டங்களுக்கும் உலக நாடுகளின் வலியுறுத்தலுக்கும் நடுவே கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அயர்லாந்தை அடுத்து ஸ்பெயினிலும் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT