அமெரிக்காவில் கடந்த வாரம் வீசிய புளோரன்ஸ் புயலைக் களத்தில் இருந்து நேரலையாக ஒளிப்பதிவு செய்தபோது, மிகையாக நடித்த வானிலை நிருபர், அந்த நாட்டின் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜினியா மாகாணங்களை புளோரன்ஸ் புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதன் காரணமாக வீசிய பேய் காற்றால் மரங்கள் பல இடங்களில் விழுந்து சாலைகளில் விழுந்து 3 பேர் பலியாகினர். கடுமையான மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் புளோரன்ஸ் புயலைக் களத்திலிருந்து நேரடியாக ஒளிப்பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி செய்த நிருபர் ஒருவர் தனது மிகை நடிப்பால் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
அந்த நிருபரின் பெயர் மைக் செய்டல், புளோரன்ஸ் புயலில் தாக்கம் எப்படி இருக்கிறது என்று நேரலை ஒளிப்பதிவில் விளக்கிய செயல், அவரால் ஓரிடத்தில் நின்று செய்தி வழங்க முடியாத படி காற்று பலமாக வீசுவதாக நகர்ந்தபடி செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பின்னால் இரு ஆண்கள் மிகவும் நிதானமாக அங்கு காற்றே வீசாதபடி பொறுமையாக நடந்து சென்றனர். இந்த வீடியோதான் தற்போது அமெரிக்காவின் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குரிய நிகழ்வாகியுள்ளது.
நெட்டிசன் ஒருவர் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மிகவும் நாடகத் தன்மையாக உள்ளது.. நண்பரே என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அமெரிக்க நெட்டிசன்கள் பலரும் அந்த நிருபரை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.