அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருந்த புளோரன்ஸ் புயல் இன்று கரோலினா மாகாணத்தைத் தாக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தரப்பில், "அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலான புளோரன்ஸ் வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைத் தாக்க உள்ளது.
எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக கரோலினா மாகாணத்தின் வடக்கும் மற்றும் தெற்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெர்ஜினியா மாகாணம் புயலால் பாதிப்புக்குள்ளாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரன்ஸ் புயல் காரணமாக கரோலினா மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரத் துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகம் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புளோரன்ஸ் புயல் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீட்புப் பணி வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, "இது அமெரிக்கவைத் தாக்கும் மோசமான புயலாக இருக்கப் போகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமான ராணுவ வீரர்கள், மருத்து உதவிகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன” என்று கூறியுள்ளார்.