ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி அகமது சாய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சலீம் அஸீமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமருக்கு நிகரான பதவியான தலைமை நிர்வாக அதிகாரியாக அப்துல்லா அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் முதன்முறையாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து, தலிபான்களுக்கு எதிரான போரில் இறங்கின. அதற்குப் பிறகு ஜனநாயக முறையிலான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
இத்தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் உலக வங்கி அதிகாரியுமான அஷ்ரப் கானி அகமதுசாயும், முன்னாள் வெளியுறவு அமைச்சரான அப்துல்லா அப்துல்லாவும் போட்டி யிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது, இருதரப்பிலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினர். ஐ.நா. மேற்பார்வையிலான மறு வாக்கு எண்ணிக்கையில் அஷ்ரப் கானி அகமது சாய் 56 சதவீத வாக்கு களைப் பெற்றது உறுதியானது. இருப்பினும் பிரச்சினை நிலவியதால், பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், அஷ்ரப் கானி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவியேற்பது என உடன்பாடு எட்டப்பட்டது.
பதவியேற்பு
நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் அதிபராக அஷ்ரப் கானியும், தலைமை நிர்வாக அதிகாரியாக அப்துல்லா அப்துல்லாவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் சலீம் அஸீமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்துல்லா கூறும்போது, “நாங்கள் இருவரும் இணைந்து ஐக்கிய அரசை நடத்துவோம். ஒருங்கிணைந்த அணியாக, ஒற்றுமையான தேசத்தை உருவாக்குவோம்” என்றார். அதிபர் அஷ்ரப் கானி அகமது சாய் கூறும்போது, “நான் ஏதேனும் நன்மை செய்தால் அதற்கு உங்களின் (மக்கள்) ஆதரவை அளியுங்கள். தவறிழைத்தால், என்னை சரி செய்யுங்கள்” என்றார்.
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு நடுவிலும் நல்லாட்சி செய்து, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தியதற்காக முன்னாள் அதிபர் ஹமீது ஹர்சாய்க்கு இருவரும் நன்றி தெரிவித்தனர்.