உலகம்

ஈரான் முதலில் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா விமர்சனம்

செய்திப்பிரிவு

ஈரான் தன்னைத் தானே முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள அஹ்வாஸ் நகரத்தில், கடந்த சனிக்கிழமையன்று நடந்த ராணுவ அணிவகுப்பில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிரிவினைவாத அமைப்பு மற்றும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினார்கள் என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்கா அரபு நாடுகளுடன் துணையுடன் நடத்தியதாக ஈரான் அதிபர் ஹசன் குற்றம் சாட்டியிருந்தார்.

ஹசனின் இந்தக் குற்றச்சாட்டை  அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர்  நிக்கி ஹாலே கூறும்போது, "ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை விமர்சிப்பதை விட்டு தன்னைத் தானே முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.  ஈரான் அதிபர் தொடர்ந்து பல காலமாகவே தனது நாட்டு மக்களை ஒதுக்கி வருகிறார்.  அவர் தனது நிலையிலிருந்து நின்று இத்தகைய தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக ஈரான் - அமெரிக்கா  இடையே ஏற்கெனவே மோதல் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT