உலகம்

அமெரிக்காவைத் தாக்கியது புளோரன்ஸ் சூறாவளி: பலத்த சேதம்; 5 பேர் பலி

செய்திப்பிரிவு

அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருந்த புளோரன்ஸ் புயல் வெள்ளிக்கிழமை கரோலினா மாகாணத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைத் தாக்கியது.

இதுவரை  புளோரன்ஸ் புயலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் மரங்கள்  வேரோடு சாய்ந்து வீடுகள் பலத்த சேதமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "புளோரன்ஸ் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை முதல் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் உட்பட 5 பேர் பலியாகினர்.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவு பகலாக மீட்புப் பணீகள் நடந்து வருகின்றன. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதியான நியூ பெர்னில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் அப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்க மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

கரோலினா மட்டுமல்லாமல் பிற மாகாணங்களை புளோரன்ஸ் புயல் தாக்கும் என்பதால் மீட்புப் பணி வீரர்கள் அங்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT