மலேசியாவில் தன்பாலின உறவில் ஈடுபட்ட 2 இளம் பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகமது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் டெரங்கானா மாகாணத்தில் 2 பெண்கள் ஒரு காரில் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை மலேசிய போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ள மலேசியாவில் தன்பாலின உறவு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு அபராதம் மற்றும் பிரம்படி தண்டனை வழங்கி மலேசிய ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் முன்னிலையில், அந்த இரண்டு பெண்களுக்கும் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மலேசியாவில் தன்பாலின உறவாளர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அமெனஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரம்படி தண்டனைக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில் ‘‘இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
இதுதொடர்பாக பல தரப்பிடமும் விவாதித்தேன். இஸ்லாம் வலியுறுத்தும் நீதி, சகிப்புத்தன்மைக்கு எதிரானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற தண்டனைகளால் இஸ்லாம் பற்றி தவறான கருத்து உருவாகிவிடும்’’ என குறிப்பிட்டார்.