கன்சர்வேட்டிவ்களுக்கு எதிரான கடும் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக ட்விட்டர் மீது புகார் எழுந்த நிலையில் ட்விட்டர் சி.இ.ஓ. ஜேக் டோர்சி அமெரிக்க காங்கிரஸில் வாக்குமூலம் அளித்த ஒரு நாள் கழித்து வலது சாரி வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸை நிரந்தரமாகத் தடை செய்ததோடு அதிகாரபூர்வ வானொலி ஒலிபரப்பின் ட்விட்டர் ஹேண்டிலையும் தடை செய்துள்ளார்.
அலெக்ஸ் ஜோன்ஸ் உரத்தக் குரல் எடுத்து டாம்பீகமான ஒரு குரலில் நிகழ்ச்சிகளில் பேசக்கூடியவர். இவர் அனைத்து விவகாரங்களிலும் ஒரு சதிக்கோட்பாட்டை வெளிப்படுத்தி வருபவர் இதனால் இவரது ரசிகர்கள் விஷயங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு உரத்த குரலில் கடுமையான கருத்துகளை வெளியிடுவார்கள். இவரது அதிர்ச்சிகரமான சதிக்கோட்பாடுகளில் இரண்டைக் குறிப்பிடலாம், சாண்டி ஹூக் எலெமெண்டரி ஸ்கூல், மற்றும் ஸ்டோன்மேன் டக்ளஸ் ஹைஸ்கூல் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சுத்த நாடகம், அந்தக் குழந்தைகள் உண்மையில் இல்லை. இதனையடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடுகளில் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோரை அலெக்ஸ் ஜோன்சின் சதிக்கோட்பாட்டு ரசிகர்கள் பின்பற்றி கடுமையாக கிண்டலும் வசையும் பாடியது நிகழ்ந்தது.
உலகில் எது நடந்தாலும் அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாக பயங்கரமான, அபாயகரமான ஹேஷ்யங்களை உண்மை போல் மக்களுக்குச் சென்றடையுமாறு உரத்த குரலில் பேசி மக்களைக் குழப்புபவர்கள் இவர்கள். வலது, இடது இரண்டு நிலைகளிலும் இத்தகைய நிலவரங்கள் இருந்தாலும் வலதுசாரிகளுக்கு பல சமயங்களில் அந்தந்த அரசின் ஆதரவும், வலதுசாரி மக்கள் பெருந்திரளும் ஆதரவு அளிப்பது இக்காலத்து ட்ரெண்ட்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அலெக்ஸ் ஜோன்ஸுக்கு எதிராக கடும் வழக்குகளைத் தொடுத்தனர். இவரது ஷோ-வுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் விசிறிதான், ஜோன்ஸின் நண்பரும் கூட. அதிபர் தேர்தல் வேட்பாளராக ட்ரம்ப் இருந்த போது ஜோன்ஸின் ஷோ-வில் ட்ரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.
அவரது தாறுமாறான ஹேஷ்யங்களில் சில...
9/11, லண்டன் குண்டு வெடிப்புச் சம்பவங்கள், பாஸ்டன் மராத்தான் குண்டு வெடிப்பு ஆகியவை அரசால் நடத்தப்பட்ட தாக்குதல்களே என்பது அலெக்ஸ் ஜோன்சின் (பிடி) வாதம். மெக்சிக்கர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் நிறவெறிப்போர் நடக்கும். டொர்னாடோ என்ற சூறாவளிக்கு அமெரிக்க அரசுதான் காரணம். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தண்ணீரில் ரசாயனத்தைக் கலப்பதால் தவளைகள் ஓர்பாலின உறவு ஜீவிகளாகிறது இப்படி... இப்படி..
இவரது பல உளறல்களை உண்மை என்று நம்புபவர்கள் அதிகம் ஆனால் அவ்வப்போது இவரைக் கோமாளி என்று கடும் கேலி மீம்களும் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அலெக்ஸ் ஜோன்ஸின் மாஜி மனைவி கெல்லி ஜோன்ஸ் தங்களுக்குப் பிறந்த 3 குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் ஜோன்ஸ் ஒரு பைத்தியம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஜோன்சின் வழக்கறிஞர், கோர்ட்டில், ஜோன்ஸ் ஒரு நாடகப்பாத்திரம் ஏந்தியிருக்கிறார் அவ்வளவே மற்றபடி அவர் மனநிலை ஆரோக்கியமானதுதான் என்று வாதிட்டார். ஆனால் நிகழ்சியை நடத்துபவர்களே இதனை பிற்பாடு மறுத்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 2018-ல் ஃபேஸ்புக், ஆப்பிள், ஸ்பாட்டிஃபை, அனைத்தும் ஜோன்ஸின் ஷோவுக்கு மூடுவிழா நடத்தியது. அவரது கணக்கையும் முடக்கியது. இவரது பேச்சுகள், கோணங்கித் தனங்கள், அபாயகரமான உளறல்வாத வீடியோக்களை பேஸ்புக் அகற்றுவதாக அறிவித்தது. அதில் கடுமையான துவேஷப்பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாக பேஸ்புக் தெரிவித்திருந்தது.
பேஸ்புக் ஜோன்ஸை தடைசெய்த போது பிரிட்டனின் பிரெக்ஸிட் ஆதரவுத் தலைவர் நைஜல் ஃபராஜ், அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் ஆகியோர் ஜோன்ஸுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தது குறிப்பிடத்தக்கது.