பிரேசில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் ஒருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடந்தப்பட்டுள்ள சம்பவம் அந் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் அதிபர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரேசிலின் முன்னாள் ராணுவ வீரரும், சோஷியல் லிபரல் கட்சியின் வேட்பாளருமான ஜெயர் போல்சோனாரோ தென்கிழக்கு மாகாணம் மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டி ஃபோரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் மர்ம நபர் ஒருவரால கத்தியால் தாக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயருக்கு குடல் மற்றும் கல்லீரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூடிய விரைவில் நலமடைவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஜெயர் தாக்கப்பட்டிருப்பது பிரேசில் தேர்தல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.