இந்தியா வலுவடைந்தால் உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் அரசியல், ராணுவ விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரான புனித் தல்வார், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ஆசிய பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியா வலுவடைந்தால் உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து வருகிறது, இதேபோல் ஆசிய கிழக்கு நாடுகளுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
இந்தியா இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வேறு எந்த நாடுகளுக்கும் இந்தியா தீங்கிழைக்காது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சிக்கு அந்த நாடு முக்கிய பங்காற்றும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. பிடிஐ