தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி மாதம் முதல் அகிம்சை வழியில் போராட்டம் நடத்த தமிழ் தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையே 1987-ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் இலங்கை அரசியல் சாசனச் சட்டத்தின் 13 ஏ பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 13 ஏ சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்தாமல் உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தக் கோரி அகிம்சை வழியில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து போராட்டம் நடத்தப்போவதாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வவுனியாவில் நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கையை தடுக்க சர்வதேச நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் குழுவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது இக்கட்சி இடம்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டணி வடக்கு மாகாண கவுன்சிலில் ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.