பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு (இன்டெர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ்) புதிய தலைமை இயக்குநராக ரிஸ்வான் அக்தர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ. தலைவராக இருக்கும் ஜாகிர் உல் இஸ்லாம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இதையொட்டி தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருக்கும் ரிஸ்வான் அக்தர், மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஐ.எஸ்.ஐ. தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தை ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிம் பாஜ்வா நேற்று அறிவித்தார். இவருடன் மேலும் 5 அதிகாரிகளுக்கு லெப்டினன்ட் ஜெனரல் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஓய்வு பெறும் ராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராணுவ தளபதிக்குப் பிறகு அதிகாரம் மிகுந்த பதவியாக ஐ.எஸ்.ஐ தலைவர் பதவி கருதப்படுகிறது. ராணுவம் தேர்வுசெய்து அளித்த பட்டியலில் இருந்து ரிஸ்வான் அக்தரை, பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தபோதும், ஆட்சியில் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் 2-வது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிஸ்வான் அக்தர், இதற்கு முன் கராச்சி நகரில் துணை ராணுவப் படைக்கு தலைமை வகித்து வந்தார். கராச்சியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய ராணுவ நடவடிக்கையை கண்காணித்தார். இந்நடவடிக்கையில் குற்றச் செயல்கள் எண்ணிக்கை குறைந்தபோதிலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் எழுந்தன.