பாகிஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து சக்திவாய்ந்த குண்டுவீசப்பட்டு நடத்திய தாக்குதலில் 3 ராணுவ அதிகாரிகளும் ஒரு ராணுவ வீரரும் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு (பொதுத் தொடர்புக்கான சர்வதேச சேவைகள்) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் வடக்கு வாஸிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று மதியம் இச்சம்பவம் நடைபெற்றது. கர்மார்கர் பகுதியின் பிரதான சாலையோரம் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர், சாலைவழியே வந்துகொண்டிருந்த ராணுவ வாகனத்தை இலக்கு வைத்து சக்திவாய்ந்த உயர் அழுத்த வெடிகுண்டை வீசினர். இதில் மூன்று அதிகாரிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் லெப்டினென்ட் கலோனியல் ராசித் கரீம் பைக், மேஜர் மோய்ஸ் மாக்ஸூத் பெய்க், கேப்டன் ஆரிஃப் உல்லா எனவும் ராணுவ வீரர் லான்ஸ் ஹவல்தார் ஜாகீர் .எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், இக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு பாக். ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஆப்கன் எல்லையோரம் உள்ள பாகிஸ்தானின் இப்பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பாதுகாப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் காயமடைந்தனர்.